Wednesday, January 02, 2013

2013-ஆம் ஆண்டின் முதல் நாள்

2013-ஆம் ஆண்டின் முதல் மணித்துளிகளை விழித்திருந்து வரவேற்றேன். வீட்டில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டோம். அதன் பின் மின்னஞ்சல் மூலமாக நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு தூங்க சென்றேன்.

வருடத்தின் முதல் நாள் நேரம் கழித்துதான் படுக்கையில் இருந்து எழுந்தேன். வழக்கம் போல் காலைக்கடன், குளியல், காலைச்சாப்பாடு, மடிகணினி முன் உட்கார்தல், மதியம் சாப்பாடு, மீண்டும் மடிகணினி முன் உட்கார்தல் என நேரம் போனது.

சாயங்காலம் அனைவரும் எங்காவது நேரம் செலவழித்து விட்டு, பின்னர் நல்ல உணவகத்தில் இரவு சாப்பாடை முடித்துவிட்டு வரலாம் என குடும்பத்தில் அனைவரும் கிளம்பினோம்.

போகும் வழியில் ஜெமினி சர்கஸ் போகலாம் என முடிவு செய்து சென்னை சென்ட்ரலை நோக்கி சென்றோம். ஜெமினி சர்கஸ் நுழை வாயிலை அடைந்தோம். அதன் பின்னர் சுமார் முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக வாகன நெரிசலில் நேரத்தை செலவழித்தோம்.

வாகன நெரிசலில் இருந்து மீண்டு செல்வதற்குள் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன. அங்கும் இங்குமாய் சிலர் டிக்கெட்களை black-இல் விற்று கொண்டிருந்தனர். அவற்றை வாங்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம்.

மெரீனா பீச் பக்கம் போனோம். அங்கு பீச் ரோட்டில் வாகன நெரிசல் மிக அதிகமாக இருந்தது. எப்படியும் காரை நிப்பாட்டி பீச் போகமுடியாது என்று தெரிந்த பின்னர் இரவு சாப்பாடை முடித்து விட்டு வீட்டுக்கு போகலாம் என அங்கிருந்து கிளம்பினோம். பீச் ரோட்டில் இருந்து மவுண்ட் ரோட்டை பிடிப்பதற்குள் ஏகப்பட்ட சந்துகளில் மாட்டினோம்.

ஒரு வழியாய் வேளச்சேரியில் உள்ள ரத்னா கபே உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கும் அதிகமான மக்கள் கூட்டம். உணவகத்தினர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடிவிட்டனர். உணவை ஆர்டர் செய்து விட்டு வெகு நேரம் உட்கார்ந்து, பிறகு சப்ளை செய்த வரை சாப்பிட்டுவிட்டு பாதியில் கிளம்பினோம்.

அதன் பின்னர் என்னை வேளச்சேரியில் உள்ள மின்சார ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுட்டு மற்றவர்கள் வீட்டை நோக்கி சென்றனர். நான் பெங்களூர் மெயில் வண்டியை பிடிக்க வேளச்சேரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சென்றேன்.

P.S. ஆண்டின் முதல் நாள் மட்டும் வெளியே போகனும்னு கிளம்பவே கூடாது. :-(

No comments:

Post a Comment