Tuesday, August 28, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" நான்காம் பாகத்திலிருந்து


  1. கடமையை முன்னிட்டுச் செய்த பணிக்கு நாம் வெகுமதியை எதிர் பார்க்கக் கூடாது. என்றாலும், எந்த நல்ல காரியமும் முடிவில் பலனளிதே தீரும் என்பது என் திடமான நம்பிக்கை.

  2. என்னிடம் இருப்பவைகளையெல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது' என்பதே அந்தப் பதில்.

  3. மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் தம்மிடம் இருக்கும் உடைமைகள் விஷயத்தில் தருமகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும். தருமகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான்  சொத்துகளிருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவதுபோல எண்ண வேண்டும்.

  4. இயற்கையான குணத்தை மாற்றிவிட யாரால்தான் முடியும்? பிரபோடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டு விட முடியும்? தாம் வளர்ச்சி பெற்ற வகையிலேயே தா புதல்வர்களும், தமது பராமரிப்பில் இருப்போரும் வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் ஆசை.

  5. ஒரு கொள்கையைச் சரியானபடி பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதும், அறிவை வளர்த்துக்கொள்ள ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி.

  6. சிறு நோய் வந்து விட்டாலும் டாக்டர், வைத்தியர்,  அல்லது ஹக்கிமிடம் ஓடி, எல்லா வகையான தாவர ,  உலோக வகை மருந்துகளையெல்லாம் விழுங்கிக் கொண்டிருப்பவர்கள், தங்கள் ஆயுளைக் குறைத்துக் கொள்ளுவது மாத்திரமல்ல, உடலுக்கு எஜமானர்களாக இருப்பதற்குப் பதிலாக அதற்கு அடிமைகளும் ஆகி விடுகின்றனர். புலனடக்கத்தை இழந்து மனிதர்களாக இல்லாதும் போகிறார்கள்.

  7. "ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவே ஆகிறான்" என்ற இந்திய பழமொழியில் அதிக உண்மை இருக்கிறது என்பதை நானும் என் சக ஊழியர்களும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

  8. இது வரையில் என்னுடைய அனுபவம் ஒரு விஷயத்தைக் காட்டிவிட்டது. ஜீரண சக்தி பலமாக இல்லாதவர்களும், படுத்த படுக்கையாக இருக்கிறவர்களுக்கும், பாலுக்கு இணையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய போஷாக்குள்ள ஆகாரம் வேறு எதுவுமே இல்லை என்பதுதான் அது.

  9. மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நர்செயலைப் பாராட்டவேண்டும்; தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலை செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். 'பாவத்தை வெறுப்பாயாக ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே' என்பது உபதேசம். இது, புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது.இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.

  10. ஒரு முறையை எதிர்ப்பதும், அதைத் தாக்குவதும் முற்றும் சரியானதே. ஆனால், அம்முறையை உண்டாக்கிய கர்த்தாவையே எதிர்த்துத் தாக்குவது என்பது தன்னையே எதிர்துக்கொள்ளுவதற்கு ஒப்பாகும்.ஏனெனில் நாம் எல்லோரும் ஒரே மண்ணைக்கொண்டு செய்த பாண்டங்கள்; ஒரே கடவுளின் புத்திரர்கள்.ஆகவே, நம்முள் இருக்கும் தெய்வீக சக்தியும் மகத்தானது. தனி ஒரு மனிதரை அலட்சியம் செய்வது அந்தத் தெய்விக சக்திகளை அலட்சியம் செய்வதாகும். அப்போது அம் மனிதருக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்குமே தீங்கு செய்வதாக ஆகும்.

  11. ஒரு காரியத்தைச் செய்ய ஒரு முறை தொடங்கிவிட்டால், அது ஒழுக்கத் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலன்றி அதைக் கைவிடவே கூடாது.

  12. தங்களுள் காணும் கடவுளை மற்றவர்களிடமும் காண வேண்டும் என்பதை நம்புகிறவர்கள், எல்லோருடனும் விருப்பு வெறுப்பின்றி வாழ முடிந்தவர்களாகவும் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

  13. பத்திரிக்கை, ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப் பிரவாகம், எவ்விதம் கிராமப் புறங்களையெல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசமாக்கி விடுமோ அதே போலக் கட்டுதிட்டதிற்கு உட்படாத பேனாவும் நாச வேலைக்குத்தான் பயன்படும். கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத்திட்டமில்லாததைவிட அது அதிக விஷமானதாகும். கட்டுதிட்டம் உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்தச் சோதனையில் தேறும்? ஆனால் பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவார்கள்? மேலும் இதில் முடிவு கூறுவது யார்? பொதுவாக நல்லதையும் தீயதையும் போலப் பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து இருந்துகொண்டுதான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

  14. நமக்கு மிகப் பெரிய சேவை செய்து வரும் வகுப்பினர் உண்டு. ஆனால், ஹிந்துக்களாகிய நாம், அவர்களைத் 'தீண்டாதார்' என்று சொல்லுகிறோம்.

  15. ஒருவருடைய உள்ளம் மாத்திரம் பரிசுத்தமானதாக இருக்குமாயின், துன்பம் வந்ததுமே அதைச் சமாளிக்க உடனே ஆட்களும் கிடைப்பார்கள்; சாதனங்களும் கிட்டும் என்பது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை.

  16. தான் பரிசீலனை செய்து நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாத விஷயத்தைக் கூறி மற்றொருவரை நம்பும்படி செய்துவிடுவது சத்தியத்திற்கு ஊறு செய்வதேயாகும்.

  17. எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.

  18. தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால், ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புதான் வக்கீலின் வேலைக்கும் உண்டு.

  19. ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கைகள்.

  20. முடிவான லட்சியம், சத்தியத்தை நாடுவதாக மாத்திரம் இருந்துவிடுமானால், மனிதன் போடும் திட்டம் எவ்வளவு தான் தவறிப் போனாலும், முடிவு தீமையானதாக ஆவதில்லை என்பதுடன், சில சமயங்களில் எதிர்பார்த்ததைவிட அதை நன்மையானதாகவும் முடிந்துவிடுகிறது.

  21. உள்ளத்தின் தூயமையிலேயே உண்மையான அழகு இருக்கிறது.

  22. தனது முழு ஆன்ம சக்தியுடன் மனித வர்க்கத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்று விரும்புகிறவர், பிரம்மச்சரியம் இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்பதை நான் தெளிவாகக் கண்டேன்.

  23. பிரம்மச்சரியம் இல்லாத வாழ்க்கை, சாரமற்றதாகவும் மிருகத் தனமாகவும் எனக்குத் தோன்றுகிறது. மிருகத்திற்கு இயற்கையிலேயே புலனடக்கம் என்பது இன்னதென்பது தெரியாது. இதற்குரிய சக்தி இருப்பதனால் புலனடக்கத்தை அனுசரிக்கும் வரையிலும், மனிதன் மனிதனாக இருக்கிறான்.

  24. பூரணமான பிரம்மச்சரியம், அசுத்தமான எண்ணத்திற்கே இடம் தராது. உண்மையான பிரம்மச்சாரி, சரீர இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக் கனவிலும் எண்ணமாட்டான். அந்த நிலையை அவன் எய்தி விட்டால்அன்றிப் பிரம்மச்சரியத்தை அடைவதற்கு அவன் வெகு தூரம் கடக்கவேண்டி இருக்கும்.

  25. விரும்பத்தகாத எண்ணங்களைத் தடுத்து மனக் கதவைப் பூட்டி விடுவதற்கு ஒருசாவி இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அதை அவரவரே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

  26. நாவின் சுவையில் அவாவுடையவனிடமே பெரும்பாலும் காமக் குரோதங்கள் இயல்பாகக் குடிகொள்ளும்.

  27. பட்டினியைப் புலன் அடக்கத்துக்கு மட்டுமின்றிப் புலன் நுகர்ச்சிக்கும் சக்தி வாய்ந்த சாதனமாகப் பயன்படுத்தலாம்.

  28. உணவின் சுவையில் கவனம் செலுத்துவது தவறு என்பதை அனுபவம் எனக்குப் போதித்தது. நாவின் சுவையைத் திருப்தி செய்வதற்காகச் சாப்பிடக் கூடாது; உடலை வைத்திருப்பதற்கு மாத்திரமே சாப்பிட வேண்டும். உணர்ச்சி தரும் ஒவ்வோர் உறுப்பும் உடலுக்கும், உடலின் மூலம் ஆன்மாவுக்கும் ஊழியம் செய்யும்போது அதனதன் இன்ப நுகர்ச்சி மறைந்து போகிறது. அப்பொழுதுதான் தான் அதற்கென்று இயற்கை வைத்திருக்கும் கடமையை அது செய்ய ஆரம்பிக்கிறது.

  29. அழியும் உடலை அலங்கரிப்பதற்காகவும், மிகச் சொற்ப அது நீடித்திருப்பதற்கு முயலுவதற்கும், ஏராளமான மற்ற உயிர்களைப் பலியிட நாம் வெட்கப்படுவதில்லை. இதன் பலனாக நம்மையே உடலோடும், ஆன்மாவோடும் மாய்த்துக் கொள்ளுகிறோம். பழைய நோய் ஒன்றைப் போக்கிக் கொள்ள முயன்று, நூற்றுக்கணக்கான புதிய நோய்களுக்கு இடந்தருகிறோம். புலன் இன்பங்களை அனுபவிக்க முயன்று முடிவில் இன்பானுபவதிற்கான நமது சக்தியையும் இழந்துவிடுகிறோம்.

  30. புலனடக்கத்துடன் இருப்பவருக்கும், புலன் நுகர்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவருக்கும் எவ்விதம் வாழ்க்கை வழிகளில் வேறுபாடு இருக்குமோ அதே போல, அவ்விரு தரத்தினரின் உணவிலும் வேறுபாடு இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை அடைய விரும்புகிறவர்கள், சுகபோக வாழ்விற்கு ஏற்ற அனுஷ்டானங்களைக் கைகொண்டே தங்கள் லட்சியத்தில் தோல்வியை அடைந்துவிடுகிறார்கள்.

  31. சிற்றின்ப வயப்பட்டுள்ள மனம், உணர்ச்சிகளை அடக்குவதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறது. ஆகையால் உணர்ச்சியைத் தூண்டிவிடாத சுத்தமான உணவும், அவ்வப்போது பட்டினி இருந்து வருவதும் உடலுக்கு அவசியம்.

  32. பாடப் புத்தகங்களின் அவசியத்தைக் குறித்துப் பிரமாத மாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. மாணவருக்கு உண்மையான பாடப் புத்தகம் உபாத்தியாயரே என்பதை நான் எப்பொழுதும் உணர்ந்து வந்தேன்.

  33. ஆன்மாவை வளர்ப்பது என்பது ஒழுக்கத்தை வளர்த்து, கடவுளைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு ஒருவரை பாடுபடுபடி செய்வதோடு தன்னைத் தானே அறியச் செய்வதுமாகும்.

  34. தமது பாதுகாப்பில் இருப்பவர்கள் அல்லது தம்மிடம் மாணவர்களாக இருப்பவர்கள் செய்துவிடும் தவறுக்குப் பாதுகாப்பாளர் அல்லது உபாத்தியாயர், ஓரளவுக்காவது பொறுப்பாளியாவார் என்பதை உணர்ந்தேன்.

  35. சத்தியத்தை நாடிச் செல்லும் போது கோபம், சுயநலம், துவேஷம் முதலியன இயற்கையாகவே நீங்கிவிடுகின்றன. ஏனெனில், அவை நீங்காவிட்டால் சத்தியத்தை அடைவது இயலாததாகும். ஒருவர் மிகவும் நல்லவராக இருக்கலாம்; உண்மையை பேசுகிறவராகவும் இருக்கக் கூடும். ஆனால், காமக் குரோத உணர்ச்சிகளுக்கு மாத்திரம் வயப்பட்டவராக அவர் இருந்தாராயின் சத்தியத்தை அவர் காணவே முடியாது. அன்பு-பகை, இன்பம்-துன்பம் ஆகிய இந்த இரண்டு வகையானவைகளிலிருந்தும் முற்றும் விடுபடுவது ஒன்றே சத்தியத்தை வெற்றிகரமான வகையில் தேடுவதாகும்.

  36. சத்தியத்தின் பக்தர், சம்பிரதாயம் என்பதற்காக எதையும் செய்து விட முடியாது. தாம் திருத்தப்படுவதற்கு அவர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். தாம் செய்ததது தவறானது என்பதைக் கண்டுகொள்ளும் போது, என்ன நேருவதாயினும் பொருட்படுத்தாது, அதை ஒப்புக்கொண்டு அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.

  37. வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழில் என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய்சொல்லிப் பணத்தையோ, அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிடவேண்டும் என்ற நோக்கம் இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றி விடவே இல்லை.

  38. அவமானம் குற்றம் செய்வதில்தான் இருக்கிறதேயன்றி, அக்குற்றத்திற்காகச் சிறை செல்லுவதில் அல்ல. அவமானத்திற்கான காரியமோ முன்பே செய்யப்பட்டு விட்டது.