- எதிராளியின் கருத்து இன்னது என்பதை அறிந்து கொண்டு, சாத்தியமான வரையில் அவருடன் ஒத்துபோவது என்பதே சத்தியாக்கிரகி என்ற முறையில் என்னுடைய தருமமாகும்.
- 'நான்' என்ற அகந்தையைப் போக்கிக்கொண்டு விடுவதுதான், அடக்கம் என்பதற்குரிய உண்மையான பொருள். 'நான்' என்பது அற்றுப் போவதே மோட்சம். இது அதனளவில் ஓர் ஒழுக்க முறையாக இருக்க முடியாதெனினும் இதை அடைவதற்கு மற்ற ஒழுக்க முறைகளை அனுசரிப்பது அவசியமாகும்.
- அடக்கமில்லாத சேவை, சுயநலமும் அகம்பாவமுமே அன்றி வேறல்ல.
- மக்களுக்குத் தன்னலமற்ற வகையில் எந்தத் துறையில் தொண்டு செய்தாலும், முடிவில் அது நாட்டிற்கு ராஜீய வகையில் உதவி செய்வதாகவே ஆகும்.
- கடவுளின் வழிகளை விவரிக்க மனிதனின் மொழிகள் தகுந்தவை அல்ல. அவர் வழிகள் விவரிக்க முடியாதவை, பகுத்தறிய முடியாதவை - இயலாதவை - என்ற உண்மையை நான் உணருகிறேன். ஆனால், அவற்றை விவரித்துக் கூறிவிட மனிதன் துணிவானாயின், அதற்கு அவனுடைய தெளிவில்லாத பேச்சைத் தவிர வேறு எந்தவித சாதனமுமே கிடையாது.
- நம் நாட்டில் வறுமையும் பட்டினியும் மக்களை வாட்டி வருகின்றன. இதனால், ஆண்டுதோறும் பிச்சைக்காரர்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இவர்கள் வேறு கதியின்றி வயிற்றுச் சோற்றுக்காகப் போராடுவது, நேர்மை, சுயமரியாதை ஆகிய உணர்ச்சிகளே இல்லாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது. நமது தருமப் பிரபுக்கள், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யாமல், வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தாமல், அவர்களுக்குப் பிச்சை போடுகிறார்கள்.
- அதிகாரிகள், வரி செலுத்துவோர் கொடுக்கும் பணத்திலிருந்தே சம்பளம் பெறுவதால் அவர்கள் மக்களின் சேவர்களே அன்றி மக்களுக்கு எஜமானர்கள் அல்ல.
- பிறரிடம் மரியாதையாக நடப்பது என்பது சத்தியாக்கிரகத்தின் மிகக் கடுமையான பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது. மரியாதையாக நடப்பது என்பதற்கு, அச்சமயத்திற்கு ஏற்பப் பழகி வைத்துக்கொள்ளும் நயமான வெளிப் பேச்சு என்பதல்ல, இங்கே பொருள். பெருந்தன்மை, மனப்பூர்வமாக ஏற்பட்டதாக இருப்பதோடு எதிரிக்கும் நல்லதைச் செய்யும் விருப்பமும் இருக்க வேண்டும்.
- மக்களின் கதி மோட்சம், அவர்களையும், துன்பங்களை அனுபவிப்பதற்கும் தியாகத்துக்கும் அவர்களுக்குள்ள தகுதியையும் பொறுத்தே இருக்கிறது.
- மத சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. அவரவரின் நம்பிக்கைதான் அவரவர்களுக்கு மேலானதாகும். மத சம்பந்தாமான விஷயங்களிலெல்லாம் எல்லோருக்கும் ஒரே விதமான நம்பிக்கை இருக்குமானால், உலகில் ஒரே ஒரு மதம் தான் இருக்கும்.
- எப்பொழுதுமே, நம்பிக்கை இல்லாததனாலும் பலவீனத்தினாலுமே சந்தேகம் உண்டாகிறது.
- பொதுஜனப் போக்கிலிருக்கும் வழக்கமான ஒரு தன்மையை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஆவேசம் தரும் வேலையென்றால் பிரியப்படுவார்கள். அமைதியான ஆக்க வேலை என்றாலோ அவர்களுக்கு வெறுப்பு. அந்தத் தன்மை இன்றைக்கும் இருந்து வருகிறது.
- ஒருவர் தாம் செய்யும் தவறுகளைப் பூதக் கண்ணாடிக் கொண்டு பார்த்து, பிறர் தவறுகள் விஷயத்தில் அவ்விதம் பார்க்காமல் இருந்தால் தான், இரண்டையும் நியாயமாக அவர் மதிப்பிட முடியும் என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன்.
- மனிதனின் உடலில் மாறுதலை உண்டாக்குவதற்கு மனத்திற்கு அபார சக்தி இருக்கிறது.
- ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்கள் தீவிரமான சுதந்திர உணர்ச்சியும், சுயமதிப்பும், ஒற்றுமை உணர்ச்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.நல்லவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பவர்களையே தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்களை வற்புறுத்த வேண்டும்.
- ஆயுத பலத்தைக் கொண்டு உலத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள் இருக்கும் காமக், குரோத உணர்ச்சிகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது.
- தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக்கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது.
- அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும்.
Sunday, September 09, 2012
மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" ஐந்தாம் பாகத்திலிருந்து
Labels:
Gandhi,
Mahatma,
My Experiments with Truth
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment