Saturday, July 21, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" மூன்றாம் பாகத்திலிருந்து


  1. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட ஒருவர், இவ்வாறுதான் நடந்து கொள்ளுவார் என்று நிச்சயமாகச் சொல்லுவது கஷ்டம். அதோடு,  ஒருவருடைய வெளிப்படையான  காரியங்களிலிருந்து, அவருடைய குணத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டு அறிந்துவிட முடியாது என்பதையும் நாம் காணலாம். ஏனெனில், அவருடைய குணத்தைக் கண்டு அறிந்துவிட, அவருடைய  வெளிப்படையான காரியங்கள் மாத்திரம் போதுமான ஆதாரங்கள் ஆகிவிடா.

  2. இயற்கையைப் போல, அன்றைக்குத் தேவையானதைப்பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது என்பதில், எனக்கு எந்த விதமான சந்தேகமும் சந்தேகமும் இல்லை.

  3. ஒழுங்கான ஒரு குடும்பத்தில், குழந்தைகள் இயற்கையாகவே அடையும் கல்விப் பயிற்சியை, மாணவர்களின் விடுதிகளில் அவர்கள் அடைய முடியாது.

  4. குழந்தைகளைச் சரியானபடி வளர்க்க வேண்டுமானால், சிசுக்களைப் பேணும் முறை, பெற்றோருக்குத்  தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன்.

  5. ஒரு குழந்தை அதன் முதல் ஐந்து வயதிற்குள் கற்றுகொள்ளததைப் பின்னால் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளுவதே இல்லை. கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையின் படிப்பு ஆரம்பம் ஆகிவிடுகிறது. கருத்தரிக்கும் போது, பெற்றோருக்கு இருக்கும் உடல், மன நிலைகளே குழந்தைக்கும் ஏற்பட்டு விடுகின்றன. கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் மனநிலைகள், ஆசாபாசங்கள், தன்மைகள் ஆகியவைகளால் குழந்தை பாதிக்கப்படுகிறது. பின்னர், குழந்தை பிறந்ததும், பெற்றோர்களைப் போலவே எதையும் செய்ய அது கற்றுக்கொள்கிறது. அப்புறம், அதிக காலம் வரையில் குழந்தையின் வளர்ச்சி,பெற்றோரைப் பொறுத்ததாகவே இருக்கிறது.

  6. உண்பதையும் உறங்குவதையும் போல் ஆண்-பெண் சேர்க்கையும் அவசியமான செயல்களில் ஒன்று என நம்புவது அறியாமையின் சிகரமே ஆகும் என்று நான் கருதுகிறேன்.

  7. இந்த உலகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலே சந்ததி விருத்திச் செயல் இருக்க வேண்டும். இதை உணருகிறவர்கள், எப்பாடுபட்டும் தங்கள் காம உணர்ச்சியைக் கட்டுபடுத்திக் கொள்ளுவார்கள்.

  8. முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்த நோக்கம், உயர்வானதாக இல்லாது போனதனாலேயே நான் தவறினேன்.

  9. வெறும் முயற்சியைக் கொண்டே நான் திருப்தி அடைந்து விடுவது, திட்டமான செயலின் அவசியத்தை நான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

  10. பிரம்மச்சர்யதைப் பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம். பிரம்மச்சர்யம் என்பது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் புலன்களை அடக்குவதேயாகும். 

  11. உடல், மனம், ஆன்மா ஆகியவைகளைக் காப்பதிலேயே பிரம்மச்சர்யம் இருக்கிறது .

  12. பிரம்மச்சர்ய விரதத்தை அனுசரிப்பதில் அவசியமான முதல் காரியம், ருசி உணர்ச்சியை அடக்குவதாகும். ருசியை முற்றும் அடக்கிவிடுவது, பிரம்மச்சர்ய விரதத்தை அனுசரிப்பதை எளிதாக்கி விடுகிறது என்று கண்டேன்.

  13. சோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் உயர்ந்த விதத்தில் தென்படுகிறது.

  14. சமூகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைப்பதையோ, அக்குறைகளுக்கு உடந்தையாக இருப்பதையோ நான் எப்பொழுதுமே வெறுத்து வந்திருக்கிறேன். சமூகத்தின் குற்றங் குறைகளைப் போக்கிக் கொள்ளாமல் அதன் உரிமைகளைப் பெற மாத்திரம் போராடுவதும் எனக்குப் பிடிக்காது.

  15. உரிமையைக் கோருவதில் சமூகத்தின் உதவியைப் பெறுவது எளிது. ஆனால், சமூகம் தன்னுடைய கடமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்பதில் அதே சமூகத்தின் உதவியை நான் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது என்பதை கண்டேன்.

  16. சத்தியம் என்பது ஒரு பெரிய மரத்தைப் போன்றது. அதை நீர் ஊற்றி நாம் வளர்க்க வளர்க்க அது மேலும் மேலும் கனிகளை அதிகமாகக் கொடுத்துகொண்டே இருக்கிறது. சத்தியத்தின் சுரங்கத்தில் மேலும் ஆழத்தில் போய், நாம் தேடத் தேட அதில் பொதிந்து கிடக்கும், மேலும் மேலும் அதிக விலை மதிப்புள்ள ரத்தினங்களைக் காண்கிறோம். பல வகைகளிலும் சேவை செய்வதற்கு ஏற்படும் வாய்ப்புகளே அந்த ரத்தினங்களாகும்.

  17. பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய திடமான அபிப்பிராயம்.

  18. தொண்டு என்பது கண்டபடியெல்லாம் உடனே முளைத்து விடக் கூடியதன்று. இதற்கு, முதலில் மனத்தில் விருப்பம் வேண்டும். பிறகு அனுபவமும் தேவை.

  19. செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்!

  20. ஒருவருக்கு என்னதான் அதிகமான வேலை இருந்தாலும் சரி, அவர் சாப்பிடுவதற்கு எப்படி நேரம் வைத்துக் கொள்ளுகிறாரோ அதே போலத் தேகாப்பியாசம் செய்வதற்கும் அவகாசம் தேடிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது, ஒருவனுடைய வேலை செய்யும் சக்தியைக் குறைத்து விடுவதற்கு பதிலாக அதிகபடுத்தவே செய்கிறது என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

  21. ஒரு பிராணி எவ்வளக்கெவ்வளவு ஆதரவற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது, மனிதனின் கொடுமையிலிருந்து காக்கப்படுவதற்கு  உரிமைப் பெற்றிருக்கிறது என்று கருதுகிறேன்.

  22. 'மகாத்மா'க்களின் துயரங்கள் 'மகாத்மா'க்களுக்கு மாத்திரமே தெரியும்.

  23. "மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான்" என்று ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை  அனுபவிக்காமல் யாரும் தப்பிவிடவே முடியாது. ஆகையால், இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியமே இல்லை. அவர் இச் சட்டத்தை இயற்றிவிட்டு விலகிக்கொண்டார் என்றே சொல்லலாம்.

  24. நாம் உயிர் வாழ்வதற்கென்று மேற்கொள்ளும் சாதனங்களுக்கும் ஓர் எல்லை இருக்கவேண்டும். உயிர் வைத்திருப்பதற்கு அவசியம் என்றாலும் சில காரியங்களை நாம் செய்யக்கூடாது.

  25. நாட்டில் ஒரு வேலையும் அகப்படாமல் கஷ்டப்படும் ஊக்கமுள்ள இளைஞர்கள், மற்ற நாடுகளில் குடியேறிவிட வேண்டும் என்று அப்பொழுது  நம்பினேன்.

No comments:

Post a Comment